திருக்கோவிலூர் அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தூக்கில் பிணம்


திருக்கோவிலூர் அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தூக்கில் பிணம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:30 AM IST (Updated: 2 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே திருமணமான 1½ ஆண்டில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். வரதட்சணை கொடுக்காததால் அவரது கணவர் குடும்பத்தினர் அடித்துக்கொன்று விட்டதாக போலீசில் தாய் புகார் கூறி உள்ளார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி பரிமளா. இவர்களது மகள் அம்பிகா(வயது 27). இவருக்கும், ஆற்காடு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜ்குமார்(30) என்பவருக்கும் கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அம்பிகாவின் பெற்றோர் அம்பிகாவுக்கு வரதட்சனையாக 15 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மேலும் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு அம்பிகாவை அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அம்பிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பரிமளாவிற்கு தகவல் கிடைத்தது. இதனால் பதறியடித்துக்கொண்டு பரிமளா தனது உறவினர்களுடன் ஆற்காடு கிராமத்துக்கு சென்றார். அங்கு அம்பிகா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.

கொலை செய்து விட்டதாக புகார்

இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்பிகாவின உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பரிமளா அரகண்டநல்லூர் போலீசில் கொடுத்த புகாரில், தனது மகள் அம்பிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. ரூ.1 லட்சம் வரதட்சணை கொடுக்காததால் அம்பிகாவை, அவரது கணவர் ராஜ்குமார், இவரது தந்தை குப்புசாமி, தாய் ராதாமணி ஆகியோர் அடித்துக்கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story