வங்கி மேலாளர் பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி


வங்கி மேலாளர் பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 Jun 2017 2:59 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி, விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பேரையூர்,


பேரையூர் அருகே உள்ளது அய்யம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரின் செல்போனிற்கு கடந்த 30–ந்தேதியன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சாப்டூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி, உங்களது ஏ.டி.எம். கார்டு எண்ணில் திருத்தம் செய்ய வேண்டும், எனவே உங்களின் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கூறுமாறு கேட்டுள்ளார். இதை நம்பிய செல்வம், தனது ரகசிய எண்ணை கூறினாராம்.

அதைக் கேட்டு வாங்கிக் கொண்ட மர்ம நபர், தேவைப்படும் பட்சத்தில் மறுபடியும் தொடர்பு கொள்வதாக கூறி, இணைப்பு துண்டித்துவிட்டாராம். இதையடுத்து மறுநாள் செல்வத்தின் செல்போனிற்கு குறுந்தகவல்கள் வந்தன. அதைக் கொண்டு தெரிந்தவர்களிடம் காட்டிய போது, விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.

விழிப்புணர்வு


அதைத்தொடர்ந்து விவசாயி செல்வம் தான் கணக்கு தொடங்கி உள்ள வங்கிக்கு சென்று விவரம் கூறியுள்ளார். மேலும் இந்த நூதன மோசடி பற்றி சாப்டூர் போலீசிலும் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். தொடரும் இது போல சம்பவங்கள், பொதுமக்களிடம் தகுந்த விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் என்று போலீசார் கூறினர்.

மேலும் இத்தகைய நூதன மோசடி குறித்து பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட மோசடி நபர்கள் பொதுமக்களிடம் நைசாக பேசி தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்கின்றனர். எது எப்படியோ, பொதுமக்கள் தாங்கள் உ‌ஷராக இருக்க வேண்டும். மேலும் வங்கி பற்றி தகவல்களை போனிலோ, மற்றவர்களிடமோ கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story