செங்கப்படை-வில்லூர் தார் சாலை, மண் ரோடாகிப்போன அவலம் சீரமைத்து தர கோரிக்கை


செங்கப்படை-வில்லூர் தார் சாலை, மண் ரோடாகிப்போன அவலம் சீரமைத்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

செங்கப்படை-வில்லூர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகாவில் உள்ளது செங்கப்படை கிராமம். இங்கிருந்து புளியம்பட்டி கிராமம் வழியாக வில்லூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருமங்கலம்-கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையையும், கள்ளிக்குடியில் இருந்து டி.கல்லுப்பட்டிக்கு செல்லும் தமிழக அரசு நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாக உள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அன்றிலிருந்து அந்த சாலையை செப்பனிடவோ, பழுதுபார்க்கவோ இல்லை. இதனால் தார் சாலை பெயர்ந்து, உருக்குலைந்து போய்விட்டது. செங்கப்படையில் இருந்து வில்லூர் செல்லும் சாலையில், புளியம்பட்டி-வில்லூர் இடையேயும், செங்கப்படை-புளியம்பட்டி இடையேயும் 4 கிலோமீட்டர் தூரம் தார் சாலை சிதைந்து மண்ரோடாகிப் போனது.

மேலும் ஜல்லிகற்கள் பெயர்ந்து போராட்டக்களம் போல் காட்சியளிக்கிறது. சாலையின் இந்த அவல நிலையால், இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த, அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

விவசாய பொருட்கள்

இந்த சாலை வழியாகத்தான் விவசாயிகள், பொது மக்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். மேலும் ரோட்டின் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காயமடைகின்றனர்.

இதுகுறித்து செங்கப்படை புளியம்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:- செங்கப்படை-வில்லூர் செல்லும் சாலையை சீரமைத்தால் தான் அரசு பஸ்கள் வந்து செல்ல வாய்ப்புள்ளது.

அரசு பஸ் வசதி இல்லாததால், இந்த பகுதியில் விளையும் விவசாய பொருட்களை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சாலை சீரமைக்கப்பட்டால், விவசாய பொருட்களை வாகனங்களில் திருமங்கலம் அல்லது விருதுநகர் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். எனவே செங்கப்படை-வில்லூர் செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story