உயரமாக இருந்த பாலம் குட்டையானது குளச்சல் துறைமுக பாலத்தின் தூண்களை மூடும் மணல்


உயரமாக இருந்த பாலம் குட்டையானது குளச்சல் துறைமுக பாலத்தின் தூண்களை மூடும் மணல்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் துறைமுக பாலத்தின் தூண்களை மணல் மூடியதால் உயரமாக இருந்த பாலம் குட்டையாக காட்சியளிக்கிறது.

குளச்சல்,

குளச்சல் துறைமுக பகுதியில் கடலுக்குள் சுமார் 161 மீட்டர் நீளத்தில் கடல் பாலம் உள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள பகுதி கப்பல்கள் வந்து செல்லும் அளவுக்கு மிகவும் ஆழமான பகுதியாகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து சேகரிக்கப்படும் அரிய வகை மணல்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இங்கிருந்து தான் கப்பலில் ஏற்றி செல்வார்கள்.

இதற்காக இப்பகுதியில் எப்போதும் கப்பல்கள் வந்து செல்லும். அப்போது இந்த பகுதியில் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது இங்கிருந்து மணல் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை. இதனால் கப்பல்கள் வருகையும் நின்று போனது.

காட்சி பொருளான பாலம்

இந்த பாலம் கடலுக்குள் மிக ஆழமாக போடப்பட்டு உள்ளது. ராட்சத தூண்களுடன் அமைந்துள்ள இப்பாலம் பார்ப்பதற்கு பிரமாண்டமாக காட்சி அளிக்கும். இங்கிருந்து மணல் ஏற்றுமதி நிறுத்தப்பட்ட பின்பு இப்பாலம் காட்சி பொருளாக மாறிபோனது.

இதனால் குளச்சல் மற்றும் குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள்  இப்பாலத்தின் மீது அமர்ந்து கடலின் அழகை அருகில் சென்று ரசித்து செல்வார்கள். கடலுக்குள் சென்று அதன் அழகை ரசிப்பதற்கு இப்பாலம் பயன்பட்டு  வந்தது.

மணல்மேடு

இந்த பாலத்தில் ஏறி சென்று  கீழே பார்த்தால் கடல் ஆழமாக தெரியும். ஆனால் ஆண்டுக்கு 3 மாதங்கள் இத்தூண்களின் கீழே மணல் மூடி காணப்படும்.

அதன்படி தற்போது இந்த பாலத்தின் தூண்களை மணல் மூடி திட்டுபோல் கடல் நீரின்றி காணப்படுகிறது. இதனால் உயரமாக இருந்த பாலம் குட்டையாக காட்சி அளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், அவர்களின் குழந்தைகளும் பாலத்தில் இருந்து மணல்மேடு மீது குதித்து உற்சாகத்துடன் விளையாடி வருகிறார்கள்.

ஆண்டுக்கு 3 மாதம்

இந்த அதிசய நிகழ்வு குறித்து இப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறியதாவது:–

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் குளச்சல் கடல் பகுதியில் கடலின் உள்ளிருக்கும் மணலை அலைகள் கரைக்கு இழுத்து வரும். அவ்வாறு வரும் மணல் இந்த தூண்களை சுற்றிலும் குவிந்து மேடாக மாறிவிடும். இதனால் தூண்கள் உயரம் குறைந்து குட்டையாகிவிடும்.

ஜூலை மாதம் தொடங்கியதும் கடலில் மீண்டும் மாற்றம் ஏற்படும். அப்போது அலைகளின் சீற்றம் அதிகரிக்கும். அந்த நேரத்தில் கரையில்  இருந்த மணல்மேடுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படும். அப்போது இந்த மணல் குன்று மறைந்து மீண்டும் பாலத்தின் தூண்கள் ராட்சத தூண்களாக காட்சி அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story