மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி கலெக்டர், அரசியல் கட்சியினர் பங்கேற்பு


மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி கலெக்டர், அரசியல் கட்சியினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

நினைவு தினத்தையொட்டி குமரித்தந்தை மார்ஷல் நேசமணியின் சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய குமரித்தந்தை மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவருடைய மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜனும் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது நகரச் செயலாளர் வக்கீல் மகேஷ், மாநில நிர்வாகிகள் தில்லைச் செல்வம், ஷேக்தாவூது ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க. அணிகள்

அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அரசு வக்கீல் பாலஜனாதிபதி, என்ஜினீயர் லெட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், சுகுமாரன், முருகேஸ்வரன், வக்கீல் ஜெயகோபால், வடிவை மாதவன், பொன்.சுந்தர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வசந்தகுமார் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், மகேஷ் லாசர், சபீன், வர்த்தக காங்கிரஸ் குமரி முருகேசன், சிவகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வசந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, “குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் மார்ஷல் நேசமணி. அவர் இந்த மாவட்ட வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனாலும் இந்த மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெறாமல் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அவரது கனவை நனவாக்கும் வகையில் குமரி மாவட்டம் அனைத்து துறையிலும் வளர்ச்சிபெற பாடுபட வேண்டும்” என்றார்.

குமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ந் தேதி அன்று மார்ஷல் நேசமணி மணி மண்டபத்தில் நடந்த மாலை அணிவிப்பின்போது அ.தி.மு.க. வினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நேற்று இந்த மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story