குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏளூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் குடிநீர் கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் குடிநீர் கேட்டு ஏற்கனவே 2 முறை அங்கு சாலைமறியல் போராட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்தனர். இதற்கிடையே புதுச்சத்திரம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இதனால் ஓரளவு குடிநீர் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் குடிநீர் எடுத்து விடவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலையில் குடிநீர் கேட்டு ஏளூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென காலிக்குடங்களுடன் 3-வது முறையாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story