பி.எம்.டி.சி. பஸ் டிரைவர்–கண்டக்டர்கள் திடீர் போராட்டம்
டெப்போ மேலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எம்.டி.சி. பஸ் டிரைவர்–கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் டெப்போவின் மேலாளராக பணியாற்றி வருபவர் பசப்பா. இவர், பி.எம்.டி.சி. பஸ் டிரைவர்–கண்டக்டர்களை மரியாதை குறைவாக பேசுவதுடன், பெண் கண்டக்டர்களிடம் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக கூறப்படுகிறது. மேலும், பஸ்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யாமல் அவர் அலட்சியமாக செயல்படுவதுடன், ஊழியர்களுக்கு விடுமுறையும் கொடுப்பது இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று திடீரென்று பி.எம்.டி.சி. சொகுசு பஸ்களின் டிரைவர்–கண்டக்டர்கள் மெஜஸ்டிக்கில் உள்ள டெப்போவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண் கண்டக்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது அவர்கள் கூறுகையில், டெப்போ மேலாளர் பசப்பா பணியில் அலட்சியமாக செயல்படுவதுடன், பெண் ஊழியர்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுகிறார். தரக்குறைவாக திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பி.எம்.டி.சி. மத்திய மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி பசவராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, பசவராஜ் கூறுகையில், பெண் ஊழியர்கள் முதன் முதலாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். பசப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனைத்தொடர்ந்து, டிரைவர்களும், கண்டக்டர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பணிக்கு சென்றனர். இந்த சம்பவம் அங்கு நேற்று சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.