கோவையில் மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சியுடன் வந்த மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது


கோவையில் மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சியுடன் வந்த மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2017 3:34 AM IST (Updated: 2 Jun 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து மாட்டு இறைச்சியுடன் வந்த மனித நேய ஜனநாயக கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

கோவை,

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவை ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து விடாமல் இருக்க போலீசார் இரும்பு தடுப்பான்களை வைத்திருந்தனர். இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீத் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுல்தான் அகமது, மாவட்ட துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் எம்.சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தள்ளு முள்ளு

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று ஒரு வேனில் நின்றவாறு சமைக்காத மாட்டு இறைச்சியை கொண்டு வந்தனர். உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் இரும்பு தடுப்பான்களை வைத்து தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசாரின் தடுப்பையும் மீறி ரெயில் நிலையத் துக்குள் புகுந்து தண்டவாளத்தில் உட்கார முயற்சித்தனர். அவர்களை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

250 பேர் கைது

இதற்கிடையில் ரெயில் நிலையத்துக்கு முன்பு ஒரு ஆட்டோவில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை மனிதநேய ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்து தீ வைக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அந்த ஆட்டோவை நோக்கி ஓடினர். உடனே போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க அவர்கள் ஆட்டோவை வேகமாக ஓட்டினர். உடனே போலீசார் அந்த ஆட்டோவை விரட்டி சென்று அதில் இருந்த உருவபொம்மையை பறித்து தீ வைக்க விடாமல் தடுத்தனர். இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதைதொடர்ந்து அனுமதியின்றி ரெயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 250 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் கைது

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதித்த மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்செல்வன் என்கிற அப்துல் வகாப் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சமைத்த மாட்டு இறைச்சியை கொண்டு வந்து சாப்பிட்டபடி மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story