கம்பத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது


கம்பத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது
x
தினத்தந்தி 2 Jun 2017 4:13 AM IST (Updated: 2 Jun 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. மேலும் ஜீப் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கம்பம்,

கம்பம் காட்டுபள்ளிவாசல் ரோட்டில் அஜிஸ்யா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் அருகே பெண்கள் தொழுகை நடத்துவதற்காக தனியாக வீடு உள்ளது. தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த பள்ளிவாசலில் ஏராளமான பெண்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு 8 மணி அளவில் சில பெண்கள் தொழுகை நடத்த சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பெண்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிவாசலில் இருந்த ஒலிபெருக்கி வயர்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் காயம்

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் கல்லை வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் ஜீப்பின் கண்ணாடி உடைந்தது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் தடியடி

இந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் கலவரம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை இருந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 10–க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story