டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நர்சிங் மாணவிகள் போராட்டம்


டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நர்சிங் மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:34 AM IST (Updated: 2 Jun 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை,

வேலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய டாஸ்மாக் கடை

வேலூர் அடுக்கம்பாறை அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ரெயில்வே கேட் ஓரம் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் அமைக்கப்பட்டது.

மதுபாட்டில்கள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் இறக்கப்பட்டு, நேற்று முதல் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதனையறிந்த, நர்சிங் மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

முற்றுகையிட்டு போராட்டம்

கடும் எதிர்ப்பையும் மீறி, டாஸ்மாக் கடை நேற்று திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இதனால் ஆத்திரமடைந்த நர்சிங் மாணவிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் என 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் புதிய டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர். இதனால் 12 மணிக்கு திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடை, நீண்ட நேரம் திறக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்ததும் வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டாஸ்மாக் கடையை திறந்தால், சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து நர்சிங் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story