தற்கொலைகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீசாரிடம் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் வலியுறுத்தல்


தற்கொலைகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போலீசாரிடம் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:58 AM IST (Updated: 2 Jun 2017 4:58 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், தற்கொலைகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று போலீசாரிடம் வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உயர் அதிகாரிகள் அவ்வப்போது சென்று ஆய்வு நடத்த வேண்டுமென்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி., ஐ.ஜி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ரவுடிகள் பட்டியலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள நீதிமன்ற கோப்புகள், நிலுவையிலுள்ள முக்கிய வழக்குகளின் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு

ஆய்வினை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார் அப்போது அவர் கூறியதாவது:–

உங்கள் பகுதியில் உள்ள (முதலியார்பேட்டை) ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களின் வருமானம் குறித்தும், அவர்களுடைய உறவினரின் நடவடிக்கைகளையும் ரகசியமாக கவனிக்க வேண்டும். இளம் குற்றவாளிகள் பெரிய குற்ற சம்பவங்களின் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க அவர்களுக்கு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடத்த வேண்டும்.

புதுவையில் தற்கொலைகள் அதிக நடக்கிறது. தற்கொலைகளை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே பொதுமக்களை அழைத்து போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்த வேண்டும். போலீசார், பொதுமக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வினை தொடர்ந்து அவர், தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன் ஆகியோரிடம் முதலியார்பேட்டை பகுதியில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகள் என்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.

செயல்படாத போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள்

புதுவை காவல்துறையில் உயர் அதிகாரிகள் முதல் ‘பீட்’ செல்லும் போலீசார் வரை அனைவருக்கும் குரூப் செல்போன் எண்கள் வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதற்கு பதிலாக நேரடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியின் செல்போனுக்கு தகவல் தெரிவிக்க இந்த குரூப் செல்போன் எண்கள் உதவியாக இருந்தது.

நாளடைவில் பொதுமக்களின் அழைப்புகளை தொந்தரவு என்று நினைத்த பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் அந்த குரூப் செல்போன் எண்களை முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக போலீஸ் அதிகாரியின் குரூப் செல்போன் எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக பதில் வருகிறது.

எனவே போலீசாருக்கு வழங்கப்பட்டு, செயல்படாமல் உள்ள குரூப் செல்போன் எண்கள் செயல்பட போலீஸ் உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story