மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்


மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் மலர்விழி வேண்டுகோள்

சிவகங்கை,

மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

தடுப்பு நடவடிக்கைகள்

சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் டெங்கு, சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்சமயம் மழைக்காலம் தொடங்க உள்ளதால் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும்.

நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. எனவே சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் வீடுகளை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அபராதம் விதிக்கவும் அல்லது குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கவும் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு

எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளில் குடிநீர் சேமிக்கும் பாத்திரம், டிரம் போன்றவற்றை காற்று புகாத வண்ணம் நன்றாக மூடி வைக்க வேண்டும். இது தவிர சிமெண்டு தொட்டி மற்றும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து நன்றாக காய வைத்த பின்னர் அதை பயன்படுத்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story