திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தடுப்பு வேலிகள் அமைப்பு
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. மேலும் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
ஆக்கிரமிப்புகள்பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமாக திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களை பலர் ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் வந்தன.
நோட்டீஸ்குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இருதிலிங்கம் – திருநீர்அண்ணாமலை கோவில்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுமார் 17 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதனுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். ஒரு சில கடைகள் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.
தடுப்பு வேலிகள்இதைத்தொடர்ந்து நேற்று கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அகற்றினர். மேலும் அந்த இடத்தில் வருங்காலத்தில் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.
இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.