சித்தரேவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சித்தரேவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு பகுதியில் 2 முதல் 4–து வார்டு வரையிலான பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு வறண்டன.
இதையொட்டி கடந்த 10 நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 2–வது வார்டு பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மின் இணைப்பு கொடுக்காததால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்இந்தநிலையில் நேற்று முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று வத்தலக்குண்டு–திண்டுக்கல் சாலையில் 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பட்டிவீரன்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.