பொங்கலூரில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொங்கலூரில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:00 AM IST (Updated: 3 Jun 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இரண்டு இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கலூர்,

பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி சக்தி நகர் மற்றும் ஏ.எல்.ஆர். நகர் ஆகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை 11 மணியளவில் ஒன்று திரண்ட பொதுமக்கள் பொங்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தரப்பில் குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:– இந்த பகுதிக்கு குடிநீர் வந்து சுமார் 15 நாட்கள் ஆகிறது. சில பகுதிக்கு அதிக அளவில் குடிநீர் செல்கிறது. இதற்கு குடிநீர் வினியோகிப்பாளர் தான் காரணம். குடிநீர் இருந்தும் முறையாக வினியோகம் செய்யாததால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை. மேலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு ஒன்று அமைத்து தரவேண்டும். அத்திக்கடவு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை.

சாலை மறியல்

மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு வரி விதிப்பு இருந்தால் ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால் பல வீடுகளில் ஒரு வரி விதிப்பு இருந்தும் 2 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோன்ற முறையற்ற குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து துண்டிக்கவேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளால்தான் பொங்கலூர் பகுதியில் தண்ணீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது. எனவே காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சினைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தாலே பொங்கலூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவர்தனாம்பிகை மற்றும் ஒன்றிய ஆணையாளர் மகுடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜமாணிக்கம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்கள். இதில் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நாச்சிபாளையம்

அதுபோல் நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வருவதில்லை என்று நேற்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொங்கலூர் ஒன்றிய அதிகாரிகள் பேச்சு நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story