கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது


கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 3 Jun 2017 3:45 AM IST (Updated: 3 Jun 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

கரூர்,

கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் மொத்தம் 17 பிரிவுகளில் மொத்தம் 1,200 இடங்கள் உள்ளன. வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மொத்தம் 5,291 எண்ணிக்கையில் விற்பனையானது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 464 மாணவ–மாணவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நேற்று நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் 38 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினர் மகன், மகள் 6 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 38 மாணவர்களுக்கும் உள்பட 85 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன.

சேர்க்கை ஆணை

கலந்தாய்வு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் மூத்த பேராசிரியர்கள் பழனிசாமி, பாண்டியம்மாள் மற்றும் பேராசிரியர்கள் மேற்பார்வையில் நடந்தது. இதில் மாணவ– மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டன.

ஆணைகளை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வழங்கினார். மாணவ– மாணவிகள் காசோலை எடுப்பதற்கு வதியாக தனியார் வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாடப்பிரிவுகள்

வருகிற 5–ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 7–ந் தேதி பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், 9–ந் தேதி பி.காம், பி.காம் சி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.

2–ம், 3–ம் ஆண்டு மாணவர்களுக்கு 16–ந் தேதி கல்லூரி திறப்பு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் பருவத்தேர்வுகள் விடுமுறை முடிந்து 2–ம் ஆண்டு, 3–ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி 16–ந் தேதி திறக்கப்படுகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு 19–ந் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த ஆண்டு அறிவியல் பாடப்பிரிவினருக்கு காலை 8.30 மணி முதல் 1.15 மணி வரை வகுப்புகள் நடைபெறும். கலைப்பாடப்பிரிவினருக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தனியார் கல்லூரி வாகனங்கள்

கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு தனியார் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டும், அதில் பதாகைகள் தொங்கவிடப்பட்டும் இருந்தன. மேலும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவ-மாணவிகளிடம் தனியார் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர், பேராசிரியைகள் தங்களது கல்லூரி குறித்து எடுத்துரைத்து துண்டுபிரசுரங்களையும் வழங்கி கல்லூரியில் சேர வலியுறுத்தினர்.


Next Story