ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் 2–வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்


ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் 2–வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Jun 2017 5:30 AM IST (Updated: 3 Jun 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் நேற்று 2–வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

தஞ்சாவூர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று 2–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரதத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்தியஅரசு அமைக்க வேண்டும். ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகஅரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படும் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, த.மா.கா. விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், துணைத் தலைவர் வாசுகோவிந்தராஜன், மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் முருகேசன், காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

துணை போகக்கூடாது

முன்னதாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிட்டு விவசாயிகளை அகதிகளாக வெளியேற்றும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மாற்றி கர்நாடகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாய நிலத்தை அபகரிக்கும் மிக மோசமான நடவடிக்கையில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு மாநிலஅரசு துணை போகக்கூடாது. அப்படி துணைபோனால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் மன்னிக்கமாட்டார்கள். அது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரானது. அவருக்கு செய்யும் துரோகமாகும். அ.தி.மு.க. தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு உரிய தண்டனையை வழங்கியே தீருவோம். எனவே மத்தியஅரசின் நடவடிக்கைக்கு துணை போவதை விட்டுவிட்டு காவிரி நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story