மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு


மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2017 5:06 AM IST (Updated: 3 Jun 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. நாசிக் அருகே ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மும்பை

மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. நாசிக் அருகே ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

விவசாயிகள் போராட்டம்


மராட்டியத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் நேற்று முன்தினம் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

அன்றைய தினம் அகமத்நகர், அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

குறிப்பாக அகமத்நகர் அருகே காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்றை விவசாயிகள் தீ வைத்து எரித்தனர். மேலும், அவுரங்காபாத்தில் விவசாயிகளுக்கும், பழ வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனால், விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

2-வது நாளாக நீடிப்பு

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. விவசாயிகளின் சாலை மறியல், வன்முறை உள்ளிட்ட காரணங்களால், நவிமும்பை சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை நேற்று கணிசமாக குறைந்தது. தினமும் நவிமும்பை ஏ.பி.எம்.சி.சந்தைக்கு 500 லாரிகளில் சுமார் 7 ஆயிரம் டன் காய்கறி வருவது வழக்கம். ஆனால், நேற்று 150-க்கும் குறைவான லாரிகளையே காண முடிந்தது.

காய்கறி விலை உயர்வு

இதனால், நவிமும்பையில் இருந்து மும்பைக்கு காய்கறி சப்ளை அடியோடு நின்றது. இதன் எதிரொலியாக மும்பையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென எகிறியது. குறிப்பாக, கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, நேற்று ஒரே நாளில் கிலோ ரூ.50-யை தொட்டது. இதேபோல், கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட கொத்தமல்லி நேற்று ரூ.100 முதல் ரூ.120 வரை மும்பையில் விற்கப்பட்டது.

எளிதில் அழுகக்கூடிய பொருட்களின் விலை, இவ்வாறு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததாக சயான்- கோலிவாடாவை சேர்ந்த தக்காளி வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல், பூ விலையும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்ந்தது. காய்கறிகளுக்கு தட்டுப்பாடும் நிலவியது.

ஊரடங்கு உத்தரவு

விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக நாசிக்கில் இருந்து மும்பைக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் காய்கறி ஏற்றுமதி முடங்கியது. இது மட்டுமின்றி, நாசிக்கில் உள்ள 15 பிரதான சந்தைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. பால் பண்ணையும் திறக்கப்படவில்லை. இதனால், நாசிக் நகர மக்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல், கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

முன்னதாக, நாசிக் அருகே உள்ள யோலே பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால், விவசாயிகளை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, யோலே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாடை சுமந்தனர்

விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாசிக், உஸ்மனாபாத், அகமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உஸ்மனாபாத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் உருவபொம்மையை பாடையில் சுமந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்துடன், அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்தும், ஊதுவத்தி கொளுத்தியும், பால் அபிஷேகம் செய்தும் கண்டனத்தை பதிவு செய்தனர். நாசிக்கில் சுமார் 100 பேர் தங்கள் தலையை மொட்டையடித்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பாலை கொட்டினர்

புனே மாவட்டம் பாராமதி சுபேகாவ் பகுதியில் காய்கறி ஏற்றிச்சென்ற லாரியை மறித்து, காய்கறியை விவசாயிகள் சாலையில் கொட்டினர். தகவல் அறிந்து வந்த போலீசார், லேசான தடியடி நடத்தி விவசாயிகளை கலைத்தனர்.

இதேபோல், இந்தாப்பூர்- பாராமதி சாலையில் பால் வேனை மறித்து, பாலை சாலையில் கொட்டியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் காரணமாக சாலையில் பாலாறு பெருக்கெடுத்து ஓடியது.

விவசாய அமைப்பு எச்சரிக்கை

இதனிடையே, உஸ்மனாபாத்தில் கிஷான் என்ற விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, இந்த போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்படி, வருகிற 5-ந் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) மாநில அரசிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லை என்றால், அதற்கு அடுத்த நாட்களில் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுப்போம் என்றும், அதற்கு அடுத்த நாள் அரசு அலுவலகங்களுக்கு ஊர்வலமாக சென்று அதன்கதவை இழுத்து மூடி பூட்டுப்போடுவோம் என்றும், அதற்கு மறுநாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு சென்று கதவை பூட்டுப்போட்டு, அவர்களது குடும்பத்தினரை சிறைப்பிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

அன்னா ஹசாரே ஆதரவு

இதனிடையே, விவசாயிகளின் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “விவசாயிகள் இந்த போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். எனக்கு அழைப்பு விடுத்தால், மாநில அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண தயார்” என்று கூறினார். இதேபோல், பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சுவாபிமானி ஷேத்காரி சங்கதானா கட்சி தலைவர் ராஜூ ஷெட்டியும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தெரிவித்திருத்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

எதிர்க்கட்சியினர் தூண்டுதல் காரணமாக தான் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாகவும், வன்முறைக்கும், விவசாயிகளுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்றும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story