மாவட்டத்தில் வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தல் 5 பேர் கைது


மாவட்டத்தில் வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

கோட்டக்குப்பம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு சரவணப்பெருமாள், போலீஸ்காரர்கள் வெங்கடேசன், மாறன் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு மினி லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த மினி லாரியில் 200 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினி லாரியில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 27), அம்மனம்பாக்கம் திருநாவுக்கரசு (22), திருக்கழுக்குன்றம் கொல்லைமேட்டுத்தெருவை சேர்ந்த வேலு (21) என்பதும், புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு மதுபாட்டில்களை கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதனை தொடர்ந்து பாண்டியன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரசுரெட்டிப்பாளையம்

இதேபோல் விழுப்புரம் அருகே பரசுரெட்டிப்பாளையத்தில் நேற்று மாலை நடமாடும் மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சங்குராஜன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 144 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே காரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன் (25) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து முனீஸ்வரனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனையபுரம் சோதனைசாவடி

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சோதனைச்சாவடியில் நேற்று போலீஸ் ஏட்டு சிவானந்தம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற தனியார் பஸ்சை வழிமறித்து சோதனை செய்ததில் பஸ்சில் பயணம் செய்த விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சரவணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story