குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:00 AM IST (Updated: 4 Jun 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டைப்பட்டி, வைவேஸ்புரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அன்னசமுத்திரத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து செங்கோட்டைப்பட்டி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 10 நாட்களுக்கு மேல் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடமும் இது குறித்து புகார் அளித்தனர்.

சாலை மறியல்

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் துரைக்கண்ணன் தலைமையில் நேற்று திண்டுக்கல்–கரூர் சாலைக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த நாகையகோட்டை ஊராட்சி செயலர் தண்டபாணி, எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதே போல் வைவேஸ்புரம் பகுதியிலும் கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திண்டுக்கல்–கரூர் சாலையில் வைவேஸ்புரம் பிரிவில் மறியல் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு சென்ற நாகையகோட்டை ஊராட்சி செயலர் மற்றும் போலீசார் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 இடங்களிலும் நடந்த போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story