அந்தியூர் பகுதியில் 13 நாட்களுக்கு பிறகு 7 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோர்


அந்தியூர் பகுதியில் 13 நாட்களுக்கு பிறகு 7 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோர்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:45 AM IST (Updated: 4 Jun 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் 13 நாட்களுக்கு பிறகு 7 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடந்தது.

அந்தியூர்,

அந்தியூர் பகுதியில் 16 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அந்தியூர் பஸ் நிலையம் மற்றும் அந்தியூர்–பவானி ரோட்டில் இருந்த 2 டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டன. மீதம் உள்ள 14 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் அந்த 14 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் கடைகளும் கடந்த 13 நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன்...

இதைத்தொடர்ந்து மூடப்பட்ட 14 டாஸ்மாக் கடைகளையும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி முதல் கட்டமாக அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியில் 2–ம், அந்தியூரில் இருந்து வட்டக்காடு செல்லும் ரோடு, பட்லூர் நால் ரோடு, சனிச்சந்தை, புன்னம் ஆகிய 4 இடங்களில் தலா ஒன்று என மொத்தம் 7 டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி நேற்று திறக்கப்பட்டன.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடை பகுதியில் யாராவது தகராறில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து அழைத்து செல்ல வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மது விற்பனை ஜோர்

போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் எந்தவித தடையுமின்றி டாஸ்மாக் கடைக்கு வந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 13 நாட்களுக்கு பிறகு அந்தியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடந்தது.

இதனால் ஒவ்வொரு கடையிலும் மது பிரியர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மீதம் உள்ள 7 கடைகளையும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.

முற்றுகையிட முயற்சி

இதற்கிடையே அந்தியூர் வட்டக்காடு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிடுவதற்காக வந்தனர். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை இடையிலேயே தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம். ஆனால் எங்களுடைய எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்,’ என்றனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘டாஸ்மாக் கடையை மூடவோ, திறக்கவோ நாங்கள் உத்தரவிட முடியாது. எனவே உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட கலெக்டரிடம் அளியுங்கள்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் அம்மாபேட்டை மற்றும் சித்தார் பகுதியில் தலா ஒரு கடை என மொத்தம் 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டன.


Next Story