தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் பா.ஜனதா முதல் நிலை கட்சியாக உருவாகும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் பா.ஜனதா முதல் நிலை கட்சியாக உருவாகும் என்று தென்காசியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தென்காசி
நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் தென்காசியில், பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா மத்திய அரசின் 3 ஆண்டு சாதனை விழா மற்றும் தேர்தல் பணி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் பால குருநாதன், ராமராஜா, பொருளாளர் கே.ஏ.ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
கழகங்கள் துரோகம்பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் சாதனைகள் எவ்வளவோ உள்ளன. ஏழை மக்கள், விவசாயிகள் பயன் அடையும் வகையில் பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி விளையாத நிலங்களுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த கழகங்கள், தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டன. மக்களை முட்டாள்களாக்கி கொள்ளை லாபம் அடித்துள்ளனர். இந்த அரசுகள் புதிதாக பள்ளிகள் திறந்துள்ளதா? தனியாரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தனியார் பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டுள்ளனர். நீட் தேர்வு மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்க்கிறார்கள்.
அரசு பள்ளிகளின் கல்வித்தரம்கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து படித்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கு 24 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு அரசு பள்ளிகளின் கல்வி தரம் உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டப்படி அந்தந்த மாநிலங்களில் 6–ம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி சட்டத்தை எதிர்க்கிறார்கள். அந்த சட்டம் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று கூறவில்லை. அது தனி மனித உரிமை. ஆனால் விவசாயிகளின் ஜீவ நாடியான பசுக்களை காப்பாற்றுவது அரசின் கடமையாகும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இதனை தவறாக புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். பசுக்களை கண்ட விலைக்கு விற்று விட்டு இயற்கை விவசாயம் செய்ய உரத்திற்கு எங்கே செல்வார்கள்? இதற்குத்தான் அரசு சட்டம் இயற்றி உள்ளது.
இன்னும் 6 மாதங்களில்...இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆளுமை செய்கிறது. தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் பா.ஜ.க முதல் நிலை கட்சியாக உருவாகும். வருகிற 2018–ம் ஆண்டில் தமிழகத்தில் பா.ஜ.க ஆளுமை செய்யும். உதிர்ந்த இலையும், மறைந்த சூரியனும் எழுவதற்கு வாய்ப்பே இல்லை. கழகங்கள் இல்லா தமிழகம். கலகங்கள் இல்லா தமிழர்கள் என்ற நிலை நிச்சயம் வரும். இதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில வணிக பிரிவு தலைவர் ராஜா கண்ணன், கோட்ட இணை பொறுப்பாளர் வேல் பாண்டியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தீனதயாளன், பாண்டி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொது செயலாளர் குத்தாலிங்கம் நன்றி கூறினார்.