நெல்லையில் கருணாநிதி பிறந்த நாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
நெல்லையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டது.
நெல்லை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தி.மு.க.வினர் தங்க மோதிரங்கள் அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலன் என்ற ராஜன், நிர்வாகிகள் அருள் இளங்கோ, ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இனிப்பு வழங்கினர்பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் விவசாய அணி சண்முகசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் கமாலுதீன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் வருசபத்து ரவி, ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை 14–வது வார்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் வின்சர் தலைமையில் தி.மு.க.வினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, கொண்டாடினர். நிகழ்ச்சியில் பொறியாளர் அணி அருள்வின் ரொட்ரிகோ, மாவட்ட பிரதிநிதி ரைமண்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு கலை இலக்கிய அணி மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு இடங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.