மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக இது வரை 397 புகார்கள் வந்துள்ளன அதிகாரி தகவல்
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக இதுவரை 397 புகார்கள் வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு சில இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் குடிநீர் வழங்கல் மாவட்ட கண்காணிப்பு அலகை கடந்த 27–2–2017–ல் உருவாக்கியது.
இதற்காக 18004251970 என்ற கட்டணமில்லா எண்ணை அறிவித்தது. இந்த எண்ணில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி இந்த அலகிற்கு கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, விருத்தாசலம், நல்லூர், மங்களூர் உள்பட 13 ஒன்றியங்களில் இருந்தும் பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வந்தனர். அந்த புகார்கள் ஏற்கப்பட்டு, அந்த குறைகளை களையவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
397 புகார்கள்இது பற்றி குடிநீர் வழங்கல் கண்காணிப்பு அலகை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. புதிய போர்வெல் அமைத்து தர வேண்டும். போர்வெல் பழுது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடையும் நிலையில் உள்ளது. குடிநீர் வரவில்லை போன்ற குடிநீர் பிரச்சினை தொடர்பாக இதுவரை 397 புகார்கள் வந்துள்ளன. அதில் 389 புகார்களை சரி செய்து விட்டோம். மீதியுள்ள 8 பணிகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகபட்சமாக கடலூர் ஒன்றிய பகுதியில் இருந்து 51 புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்தையும் சரி செய்து விட்டோம். கடலூர் நகராட்சி பகுதியில் 2 இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்றார்.