3 வாலிபர்கள் கைது ‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறி


3 வாலிபர்கள் கைது ‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறி
x
தினத்தந்தி 4 Jun 2017 4:36 AM IST (Updated: 4 Jun 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து கார் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சாரம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். கார் டிரைவர். நேற்று அதிகாலையில் லாஸ்பேட்டை புதுப்பேட் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே சென்ற போது வாலிபர் ஒருவர் சைகையால் லிப்ட் கேட்டார். அவர் மீது பரிதாபப்பட்ட செந்தில் முருகன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் ஏறும் படி கூறினார்.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் அங்கு வந்து செந்தில் முருகனை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் செந்தில் முருகன் அதிர்ச்சி அடைந்தார். வழிப்பறி சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 தனிப்படைகள்

விசாரணையில், செந்தில் முருகனிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றது புதுப்பேட் பகுதியை சேர்ந்த ரமணா, வெங்கடேஸ்வரா நகர் கார்த்தி என்கிற கார்த்திகேயன்(வயது 21), ஜீவானந்தபுரம் சஞ்சய் என்கிற சஞ்சய் குமார்(19), புதுப்பேட் சம்பூர்ண சஜித்(19) என்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் குற்றவாளிகள் புதுப்பேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று கார்த்தி, சஞ்சய், சம்பூர்ண சஜித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ரமணா தப்பி ஓடி விட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ரமணாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை 12 மணி நேரத்தில் கைது செய்த லாஸ்பேட்டை போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story