போடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


போடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:00 AM IST (Updated: 5 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி,

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் 2 மின் மோட்டார்களும் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சில்லமரத்துப்பட்டி கிராமத்துக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையொட்டி இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அருகில் இருந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடித்து வந்தனர்.

சாலை மறியல்

தங்களது கிராமத்துக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு 7 மணி அளவில் தேவாரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story