இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரண பொருட்கள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரண பொருட்கள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:00 AM IST (Updated: 5 Jun 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரண பொருட்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிறு கோவில்களுக்கான பூஜை உபகரணங்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டு சிறு கோவில்களுக்கான பூஜை உபகரணங்கள் மற்றும் 176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:– மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமயம் சார்ந்த பொதுமக்களுக்கு அவரவர் புனித தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல உதவித்தொகை வழங்கும் திட்டம், ரமலான் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்புக்கஞ்சி தயாரிக்க 4,000 மெட்ரிக்டன் அரிசி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகைகை ரூ.1000–த்தில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் மொத்தம் 445 கோவில்கள் உள்ளன. அவற்றில் நிதி வசதியற்ற 316 சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் 150 கோவில்களுக்கு தலா ரூ.2,500 மதிப்பில் மொத்தம் ரூ.3.75 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கிஉள்ளது. அதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் விமான நிலையம் அமைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு அரங்கம்

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ராமநாதபுரம் டென்னிஸ் கிளப் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக அமைந்துள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்பு திட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி, ராம்கோ கூட்டுறவு தலைவர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம், மண்டபம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பாலசங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story