‘ஆம்னி’ பஸ்களால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி பயணிகள் கடும் அவதி
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ‘ஆம்னி’ பஸ்களின் ஆக்கிரமிப்பினால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமான ஒன்று. பண்டிகை காலங்களின் முடிவு நாள், தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முந்தைய நாட்களிலும் மத்திய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாகும்.
இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் திடீர் என போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து எந்த பஸ்களும் வெளியே வர முடியவில்லை. வெளியூர்களில் இருந்து திருச்சிக்கு வந்த பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திற்குள்ளும் செல்ல முடியவில்லை.
ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்புஇதற்கு முக்கிய காரணம் ஆம்னி பஸ்களின் ஆக்கிரமிப்பு தான். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7–ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ஆம்னி பஸ்களை வ.உ.சி. சாலை, தேவர் சிலை, காமராஜர் சிலை, ராயல் ரோடு, பொதிகை அருகில், டவுண்பஸ்கள் நிற்கும் இடம் என எல்லா பகுதிகளிலும் நிறுத்திக்கொண்டார்கள். முகூர்த்த நாள் என்பதால் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து ஓட்டல்களிலும் கார்களில் வந்தவர்களாலும் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் வில்லியம்ஸ் சாலையில் சாக்கடை வாய்க்காலில் குறும்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அந்த வழியாக வழக்கமாக செல்லும் பஸ்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை.
சிக்கிய வாகனங்கள்இதனால் மத்திய பஸ் நிலையம் பகுதியில் கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என நெருக்கடியில் சிக்கி கொண்ட வாகனங்கள் ஒரு அடி கூட நகர முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்கள் வெளியே வர முடியாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நெருக்கடியில் நோயாளியை ஏற்றிக்கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கி கொண்டது. ஆம்புலன்சில் இருந்து அவசர ஒலி எழுப்பப்பட்டும் பலன் இல்லாமல் போனது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க போலீசார் யாரும் அந்த பகுதிக்கு வரவில்லை. தன்னார்வம் மிக்க இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக நின்று கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ்சை அங்கிருந்து எடுத்து செல்ல ஏற்பாடு செய்து ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அதன் பின்னர் தான் மற்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக செல்ல தொடங்கின.