குடிநீர் திட்டப்பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆய்வு


குடிநீர் திட்டப்பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அந்தந்த ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கலெக்டர் கதிரவன், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

கடும் வறட்சி

தற்போது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வறட்சி நிவராண பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு , புதிய குழாய்கள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை மற்றும் விவசாய பாசனத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு ரூ.150 கோடி ரூபாய் அளவிற்கு திட்ட மதிப்பீடு செய்து, எண்ணேக்கோல் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கு தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு வந்து அந்த தண்ணீர் பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகள், சத்துணவு மையங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் தம்பிதுரை வழங்கினார். மேலும் சென்றாய கவுண்டனூரில் புதிய பகுதி நேர ரேஷன் கடையையும், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையையும் அவர் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமணன், கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் ரவிசந்திரன், ஆவின் தலைவர் தென்னரசு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேம்நாத், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story