கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆபத்தான மரங்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2017 4:15 AM IST (Updated: 5 Jun 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உதவி கலெக்டர் அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், கருவூலத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

மேலும் இங்குள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுப்பார்கள். சிலர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கலெக்டர் அலுவலக சைக்கிள் நிறுத்தும் பகுதியில் நின்று கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.

ஆபத்தான மரங்கள்

அவ்வாறு அதிகளவில் கூட்டமாக வரும் பொதுமக்களில் 5 பேரை மட்டுமே கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுமதி அளிப்பார்கள். மீதமுள்ளவர்களை சைக்கிள் நிறுத்தம் அருகில் உள்ள மரங்களின் நிழலில் நிற்குமாறு கூறுவார்கள்.

இந்த நிலையில் கடும் வறட்சியால் சைக்கிள் நிறுத்தம் பகுதியில் உள்ள பழமையான புளிய மரம், வாகை மரம் ஆகியவை பட்டுப்போய் விட்டன. புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து கீழே விழுகின்றன. வாகை மரமும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இந்த வழியாக தினமும் அரசு ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், மொபட்டுகள், ஸ்கூட்டர்களை சைக்கிள் நிறுத்ததில் விடுவதற்கும், மாலையில் மீண்டும் எடுத்துச் செல்வதற்கும் வந்து செல்கின்றனர்.

எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story