சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


சீசன் களை கட்டியது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சீசன் களை கட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். கடந்த 2 ஆண்டுகளாக சீசன் போதுமானதாக இல்லை. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவியது. தொடர்ந்து கடந்த 2-ந் தேதி காலையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் நன்றாக விழ தொடங்கியது.

இதனால் சீசன் தொடங்கியதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அன்று இரவில் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நேற்று காலையில் இருந்தே சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. அருவிக்கரை பகுதிகளில் வெயில் இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையில் நனைந்தவாறே சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அனைத்து அருவி கரைகளிலும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். குற்றாலத்தில் நேற்று ரம்மியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சீசனை முழுமையாக அனுபவித்தனர்.


Next Story