மங்களூரு அருகே அரபிக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
மங்களூரு அருகே அரபிக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மங்களூரு,
மங்களூரு அருகே அரபிக்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு ஊழியர்களை காப்பாற்றிய கடலோர காவல்படையினருக்கு மந்திரி யு.டி.காதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடல் அரிப்பை தடுக்கும் பணிதட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பழைய துறைமுகம் அருகே உல்லால் முகவீரபட்டணா பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மீனவர்கள் அரபிக்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். முகவீரபட்டணா பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நடுக்கடலில் பார்ஜி என்ற எந்திர வசதிகள் உள்ள கப்பல் உதவியுடன் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் 27 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் பணிகள் தொடர்ந்து நடந்தது.
அப்போது எதிர்பாராதவிதமான அந்த பார்ஜி கப்பல், பாறைகள் மீது மோதியதாக தெரிகிறது. இதனால், கப்பல் சேதமடைந்து மூழ்க தொடங்கியது. இதன்காரணமாக கப்பலில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து மாலை 4.45 மணி அளவில் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பத்திரமான மீட்புஇதையடுத்து கடலோர காவல் படையினர் சுமார் 50 பேர் ஐ.சி.ஜி.எஸ். அமர்டேயா கப்பல் உதவியுடன் கடலுக்குள் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 4 ஊழியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. வானிலை மோசமாக இருந்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் 4 ஊழியர்களுடன் கடலோர காவல் படையினர் கரைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையும் மீட்பு பணி தொடங்கியது. மீதமுள்ள ஊழியர்களை மீட்பதற்காக கேரள மாநிலம் கொச்சி, கோவா ஆகிய பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால் கடலோர காவல்படையினர் ஐ.சி.ஜி.எஸ். அமர்டேயா கப்பலில் சென்று மீதமுள்ள ஊழியர்கள் 23 பேரையும் பத்திரமாக மீட்டனர். கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து அனைத்து ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாராட்டுகடலோர காவல் படையினர் துரிதமாக செயல்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் பத்திரமான மீட்கப்பட்டனர். இதையடுத்து ஐ.சி.ஜி.எஸ். அமர்டேயா கப்பல் மூலம் கடலோர காவல்படையினர் வேறு யாராவது உள்ளனரா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். நடுக்கடலில் பணியில் இருந்த கப்பல் கடலுக்குள் மூழ்கிய சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நேற்று மங்களூருவில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்தில் வைத்து மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடல் அரிப்பை தடுப்பதற்காக நடந்த பணியின்போது பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கிய கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் கடலோர காவல் படையினர் பத்திரமான மீட்டுள்ளனர். கடலோர காவல் படையை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவினர் துரிதமாக செயல்பட்டு ஊழியர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது இந்திய கடலோர காவல்படை டி.ஐ.ஜி. எஸ்.எஸ்.தாசில் உள்ளிட்டோர் இருந்தனர்.