மராட்டியத்தை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் பணியுமா மாநில அரசு?


மராட்டியத்தை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் பணியுமா மாநில அரசு?
x
தினத்தந்தி 5 Jun 2017 3:33 AM IST (Updated: 5 Jun 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

ஏர் உழுது சோறு தரும் விவசாயிகள் இன்று நெற்களம் விட்டு போர்க்களம் காண்கிறார்கள்.

ர் உழுது சோறு தரும் விவசாயிகள் இன்று நெற்களம் விட்டு போர்க்களம் காண்கிறார்கள். விரும்பியா? இல்லை. வறட்சி அரக்கன் வதைக்கும் போது வழியின்றி காக்கும் என்று எண்ணி அரசை நாடுகின்றனர். விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் கழனியில் கால் பதித்து கிடக்கும் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட தள்ளப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் மத்திய பா.ஜனதா அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாட்கள் நூதன முறையில் போராடி வந்தனர்.

இங்கு மராட்டியத்தில் மாநில பா.ஜனதா அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

வறட்சி

மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்தன. விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டார்கள். எனவே விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் மாநிலத்தை ஆளும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இவர்களுடன் சேர்த்து அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவும் எழுப்பிய குரல் விவசாயிகளின் கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டின் போது பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

மாறாக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மாநில நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், ‘வேளாண் துறையில் முதலீட்டை மாநில அரசு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடன் வலையில் இருந்து மீள்வார்கள். விவசாய கடனை தள்ளபடி செய்தால், அது விவசாய துறையின் முதலீட்டை பாதிக்கும்’ என்றார்.

இது விவசாயிகள் மத்தியில் மாநில அரசு மீது பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.

எதிர்க்கட்சிகளும் கடுமையாக வசைபாடின. சட்டசபை வளாகத்திலேயே பட்ஜெட் உரை தீ வைத்து கொளுத்தப்பட்டது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கூறியது.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைத்த பா.ஜனதா அரசு விவசாயிகளின் பயிர்க்கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது, மராட்டியத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வித்திட்டது.

உத்தரபிரதேசத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி விவசாயிகள் போராட்ட களத்தில் குதித்தார்கள்.

சர்ச்சை கருத்து

விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பாலுக்கு கூடுதல் கொள்முதல் விலை, வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை போன்ற கோரிக்கைகளும் பிரதானமாக்கப்பட்டன.

இந்த நேரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயை விட்டதுபோல, பயிர்கடனை தள்ளுபடி செய்தால், விவசாயிகளின் தற்கொலை நின்றுவிடும் என்று எதிர்க்கட்சிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கட்டும் என்று மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதன் பின்னர் தான் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டம் தீவிரமானது. ஜூன் 1–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினார்கள்.

மாநிலத்தை உலுக்கிய போராட்டம்

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து கிஷான் கிராந்தி மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்து தீவிரப்படுத்தியது. வேளாண் பணிகள் முடக்கப்பட்டன.

பல வடிவங்களில் போராட்டத்தை நடத்தி விவசாயிகள் மாநிலத்தையே உலுக்கினார்கள். சாலை மறியல் நடத்தினார்கள். நகரப்பகுதிகளுக்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்ட பால் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காய்கறி, பழங்கள் தரையில் வீசி சிதைக்கப்பட்டன.

ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. காய்கறி ஏற்றி வந்த லாரி தீ வைத்து எரிக்கப்பட்டது. மொட்டை அடுத்துக்கொண்டும், பாலை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டும் அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் நகர பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நகர பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் காய்கறி வரத்து இன்றி வெறிச்சோடின.

அரசு அசையாது

மாநில தலைநகர் மும்பை நகருக்கு காய்கறி வினியோகம் செய்யும் நவிமும்பை வாஷி ஏ.பி.எம்.பி.சி. மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு வரும் லாரிகளை விவசாயிகள் வரவிடாமல் தடுத்தனர். இதனால் மும்பையில் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு எகிறியது.

10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 10 மடங்கு அதிகரித்து ரூ.100–க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே இந்த பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகளுக்கு ஆதரவாக நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் மும்பையில், நிருபர்களிடம் கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் மாதவ் பண்டாரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது பெரிய வி‌ஷயம் அல்ல. சேமித்து வைத்திருக்கும் உணவு தானியங்களை விற்பனை செய்யவில்லை என்றால், இழப்பு அவர்களுக்கு தான். அரசு எதையும் இழக்காது. விவசாயிகள் போராட்டம் நீடித்தாலும் அரசு அசையாது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

நடவடிக்கை இல்லை

விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தான் தூண்டி விடுவதாக முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். எது எப்படி ஆயினும் 4 நாட்களாக நீடித்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டே பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

போராட்டத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் விவசாயிகளிடம் மாநில அரசு பணியுமா? அல்லது பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்ற தனது முடிவில் அரசு உறுதியுடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story