பேரணாம்பட்டு அருகே கரடி தாக்கியதில் பெண் படுகாயம்
பேரணாம்பட்டு அருகே உள்ள பொகளூர் மேல் ஆவாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மாகாம்மாள் (வயது 38).
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே உள்ள பொகளூர் மேல் ஆவாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மாகாம்மாள் (வயது 38). இவர், அதே கிராமத்தில் உள்ள ஜெகன்நாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.
பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டை ஒட்டியுள்ள தார்சாலையில் நடந்து சென்றபோது, வனப்பகுதியில் உள்ள புதரில் இருந்து 3 கரடி குட்டிகளுடன் தாய் கரடி திடீரென வெளியில் வந்து மாகாம்மாளின் வலது கை தோள்பட்டையை பிடித்து இழுத்து தாக்கியதில் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரத்தினவேலு என்பவர் பொதுமக்கள் உதவியுடன் மாகாம்மாளை மீட்டார். கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த மாகாம்மாள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.