குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
டவுனில் ஒரே டாஸ்மாக்கடைகுடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 11 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள 1 கடையை தவிர மற்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. குடியாத்தம் டவுன் பகுதியில் இந்த ஒரே கடை மட்டுமே இருப்பதால் கடையில் ‘குடிமகன்’கள் கூட்டம் குவிந்தது. ஏற்கனவே இந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த டாஸ்மாக் கடை சீவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக போடிப்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, சீவூர், மூங்கப்பட்டு, தட்டப்பாறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியாகதான் செல்கின்றனர். மாலை வேளைகளில் ‘குடிமகன்’கள் டாஸ்மாக் கடை அருகிலேயே ரோட்டிலேயே அமர்ந்து மதுஅருந்தி வருவதால் அப்பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
டாஸ்மாக்கடை முற்றுகைமேலும் தற்போது பள்ளி கோடை விடுமுறை முடிந்து தொடங்க உள்ளதால் கிராமங்களில் இருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள் இப்பாதையின் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாலையில் ‘குடிமகன்’களின் தொல்லையால் இப்பாதை வழியாக செல்லும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று 100–க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடைக்கு பூட்டு போட முயற்சி செய்தனர். தொடர்ந்து கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், ஜனார்த்தினி, சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகூரான், ராமசாமி, விஜயகுமார், முன்னாள் நகரமன்ற தலைவர் ஆட்டோ மோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவார கால அவகாசத்திற்குள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசாருடன் வாக்குவாதம்முன்னதாக முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.