அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்


அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு

திருப்பூர்,

திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது, காவல்துறையை கண்டித்து உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாரணாசிபாளையம் பிரிவு குருவாயூரப்பன் நகரில் தொழுகை கூடம் அமைக்க அனுமதி வழங்காத மாவட்ட நிர்வாகம், காவல்துறையை கண்டித்தும், அங்கு நிரந்தர தொழுகை கூடம் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் 12.30 மணிக்கு முற்றுகை போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் அம்சா சாகிப் தலைமை தாங்கினார். அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் முகமது யாசர் வரவேற்றார்.

அனுமதி தர வேண்டும்

இதில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசும்போது, திருப்பூர் குருவாயூரப்பன் நகரில் சொந்த இடத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்ட அனுமதி கேட்டபோது இங்குள்ள மாவட்ட நிர்வாகம், காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. வேறு இடத்தில் பள்ளிவாசல் கட்ட அனுமதி கேட்டும் அதற்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. காலி இடத்தில் தொழுகை நடத்தக்கூட போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். ரமலான் தொழுகைக்காக கூடாரம் அமைக்கக்கூட அனுமதி கொடுக்காமல் உள்ளனர்.

சாலையோரம் சிலை வைத்து வழிபடவும், வழிபாட்டு தலங்கள் அமைக்கவும் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருப்பூரில் பல இடங்களில் சாலையோரம் வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதை அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கிறார்கள். திருப்பூரில் 4 இடங்களில் பள்ளிவாசல் கட்ட அனுமதி மறுத்துள்ளனர். அதற்கு உரிய அனுமதி தர வேண்டும். முதற்கட்ட போராட்டமாக இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது. அனுமதி கொடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்றார்.

உருவ பொம்மை எரிப்பு

இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில துணைத்தலைவர் ஷேக் முகமது அன்சாரி, அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனீபா, த.மு.மு.க. மாநில செயலாளர் உம்மர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது காவல்துறையை கண்டித்து உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமியிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமி‌ஷனர் கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதவாறு நுழைவுவாயில் கேட்டுகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடந்ததால் மனு அளிக்க வந்த மக்களை சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர். போராட்டம் முடிந்ததும் சிலர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் தொழுகை நடத்தி விட்டு சென்றனர்.

போக்குவரத்து மாற்றம்

போராட்டம் நடந்தபோது பல்லடம் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக திருப்பி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.


Next Story