டயர் வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு


டயர் வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்து நாசம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே டயர் வெடித்து லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை,

மாயனூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான லாரிக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி) வாங்குவதற்காக குளித்தலையை அடுத்த அய்யர்மலை அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். லாரியை அவரது டிரைவர் ஓட்டிவந்தார். லாரியை குளித்தலை வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆய்வு செய்தபோது, சில ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிந்தது. எனவே உடனடியாக அந்த ஆவணங்களை பெற்றுவருமாறு கூறினார். இதையடுத்து லாரியை டிரைவர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தார். குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியின் டயர் வெடித்து லாரி தீப்பிடித்தது. தொடர்ந்து டீசல் டேங்க் வெடித்து லாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் குளித்தலை- மணப்பாறை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர். இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் மற்றும் போலீசார் பற்றி எரிந்த லாரியின் அருகே பொதுமக்கள் செல்லாத வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனர். இந்த தீ விபத்து காரணமாக குளித்தலை-மணப்பாறை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story