சிவகங்கை அருகே கி.பி.13–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கி.பி.1310–ல் ஆட்சி புரிந்த வீர வல்லாளன் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை அருகே கி.பி.1310–ல் ஆட்சி புரிந்த வீர வல்லாளன் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோவில் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து பழமையான கோவில் குறித்து, அதனை கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு கூறியதாவது:–
பழமையான சிவன் கோவில்மேலப்பூங்குடியில் வசித்து வரும் மாதவன்(வயது 80) என்பவர் கொடுத்த தகவலின்படி அந்த பகுதியில் உள்ள வெள்ளிமலை என அழைக்கப்படும் மலைத்தொடரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மலைத்தொடரின் அடிவாரத்தில் மூக்கரைபிள்ளையார் என்றழைக்கப்படும் சிதைந்த கோவில் ஒன்று அடர்ந்த மரங்களுக்கு நடுவில் இருப்பது தெரியவந்தது. இங்கு பழங்காலத்தில் பழமையான பெரிய சிவன் கோவில் ஒன்று இருந்தற்கான அடையாளங்களாக சிவலிங்கத்தின் ஆவுடையும், தலை இல்லாத அக்னி பகவான் சிலையும்(சிலை அடியில் ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளது), சேதமடைந்த நந்தி சிலையும் காணப்படுகிறது. மேலும் இந்த கோவிலை ஒட்டி மக்கள் ஏராளமானோர் வாழ்ந்ததற்கான ஆதாரமாக மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இதுதவிர சிறிது தொலைவில் ஒரு பெரிய கல்தொட்டியும், அதனருகே ஸ்ரீதேவி சிலை உடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
ஆதாரங்கள்மேலும் சிவன் கோவில் சொத்தின்(தேவதானம்) எல்லை கல்லாக கருதப்படும் சூலக்கல் நான்கு திசைகளிலும் நடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவில் எந்தக்காலத்தில் கட்டப்பட்டது, எப்போது சிதிலமடைந்தது என்பதை உறுதியாக சொல்வதற்கான ஆதாரங்கள் இல்லை. எனினும் சோழர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டு, முகமதியர்கள் படையெடுப்பால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது. பாண்டிய மன்னர்களுக்கு இடையே இருந்த குழப்பத்தை பயன்படுத்திக் கொண்ட டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் கபூர் கி.பி.1310–ல் தென்னிந்தியாவில் படையெடுத்தான். அப்போது சுந்தரபாண்டியனுக்கு, கொய்சாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளன் உதவியதால், பாண்டிய நாட்டின் தொண்டை மண்டலத்தின் சில பகுதிகள் வீர வல்லாளனுக்கு கிடைத்தாக வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது.
வீர வல்லாளன்முன்னொரு காலத்தில் மதுரையின் தென்பகுதி தவிர மற்றபகுதிகள் அனைத்தும் வீர வல்லாளன் என்பவன் ஆட்சி செய்தான் என்ற வரலாறும் உள்ளது. வீர வல்லாளன் சிவத்தொண்டனாக இருந்து பல சிவாலாயங்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டிருக்கலாம். எனவே இந்த சிவன் கோவிலை வீர வல்லாளன் தான் கட்டியுள்ளான் என்பது தெளிவாகிறது. வீர வல்லாளன் அக்னி குலத்தைச் சேர்ந்ததால் இக்கோவிலில் அக்னி தேவனை வைத்து பூஜித்துள்ளான் (அக்னியின் வாகனம் ஆடு. இச்சிலையில் ஆடு வாகனமாக உள்ளது).
உண்மை வரலாறுஅக்னி தேவனுடைய சிலை, லிங்கத்தின் பீடம், நந்தி சிலை, சிறிது தூரத்தில் உடைந்த அம்மன் சிலை, பெரிய கல்தொட்டி, மேலும் இக்கோவிலில் இருந்து 3 கி.மீ. சுற்றளவிற்கு சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் எல்லையை குறிக்கும் திரிசூலம் போட்ட நான்கு நடுகல்கள், அம்மன் ஸ்ரீதேவியின் சிலை ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு பார்க்கும்போது, இந்த பகுதியில் மிகுந்த செல்வாக்குமிக்க நிலையில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் இருந்திருக்கலாம். இதனையடுத்து வீர வல்லாளன் கி.பி.1342–ல் சுல்தானால் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டுள்ளான். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டால் வீர வல்லாளம் மற்றும் அந்த காலத்தில் உள்ள மன்னர்களின் உண்மை வரலாறு கண்டறியப்படலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.