தஞ்சையில் 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் ஜி.கே.வாசன் பங்கேற்பு


தஞ்சையில் 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் ஜி.கே.வாசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Jun 2017 4:30 AM IST (Updated: 6 Jun 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வலியுறுத்தி தஞ்சையில் 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் ஜூன்1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று நிறைவு நாளான 5-வது நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்து பேசினார்.

உண்ணாவிரதத்தில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில் காவிரி நீரை பெற்று தர வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழுவை மத்தியஅரசு அமைக்க வேண்டும். ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகஅரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக வாழ்வாதாரத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்படும் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார், விவசாய அணி தலைவர் புலியூர்நாகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

முன்னதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர் களிடம் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடியும் பொய்த்து விட்டது. குடிநீருக்கும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் விவசாயிகள் தற்கொலை தான் தொடரும். ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் காவிரி விவகாரத்தில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுத்து இருப்பார். அவருடைய வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story