மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவேன் மாநகராட்சி புதிய ஆணையாளர் பேட்டி

மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவேன் மாநகராட்சி புதிய ஆணையாளர் அனிஷ் சேகர் பேட்டி
மதுரை,
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவேன் என்று மாநகராட்சி புதிய ஆணையாளர் அனிஷ் சேகர் கூறினார்.
பொறுப்பேற்புமதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த சந்தீப் நந்தூரி நெல்லை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவருக்கு பதிலாக, புதிய ஆணையளராக அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாநகராட்சி அண்ணா மாளிகையில் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியில் ஏராளமான நலத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டப்பணிகள் முழுமை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்படும். குடிநீர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்க்கப்படும்.
கட்டிட விதிமீறல்கள்டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுவற்றில் சித்திரம் வரைந்ததால், அதில் போஸ்டர் ஓட்டப்படுவதில்லை. அந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல்கள் தடுக்கப்படும். குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உடன் இருந்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அனிஷ் சேகர், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். டாக்டரான இவர் 2011–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். மேட்டுரில் சப்–கலெக்டராகவும், கோவையில் வணிகவரித்துறை இணை கமிஷனராகவும் பணியாற்றிய அவர், தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.