முதல்போக சாகுபடியை தொடங்காமல் தரிசாய் கிடக்கும் வயல் வெளிகள்: விவசாயிகள் வேதனை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடியை தொடங்காமல் தரிசாய் கிடக்கும் வயல் வெளிகள் விவசாயிகள் வேதனை
தேனி,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி பணியை தொடங்காமல் வயல்வெளிகள் தரிசாய் கிடக்கின்றன.
கம்பம் பள்ளத்தாக்குதேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பது லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ளது. கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி போன்ற பகுதிகளும் இதற்குள் அடங்குகின்றன. இங்கு சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடப்பது வழக்கம்.
முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை நம்பியே இந்த விளை நிலங்கள் உள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக சாகுபடிக்காக ஜூன் 1–ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டியது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
தரிசாய் கிடக்கும் வயல்கள்எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை என்பதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் வானம் பார்த்த பூமியாக தரிசாக கிடக்கிறது. வழக்கமாக மே மாதம் இறுதியிலேயே கம்பம் பள்ளத்தாக்கு பகதிகளை விவசாயத்திற்காக உழுது தயார் படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் வயலில் நீர் பாய்ச்சி, சேறும் சகதியுமாக உழுதுபோடப்பட்டு இருக்கும். ஆங்காங்கே நடவுப் பணிகள் தொடங்கி நடந்து கொண்டு இருக்கும்.
ஆனால், அத்தனைக்கும் மாறாக இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்காக வயல்வெளிகள் உழுதுகூட போடப்படவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது, தேனி மாவட்டத்தில் சாரல் மழை பொழியும். ஆனால், இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் பருவமழை பெய்யத் தொடங்கவில்லை. தேனியிலும் சாரல் மழையைக் கூட காணவில்லை. இதனால், விவசாயிகள் விரக்தியில் விளை நிலங்களை உழாமல் போடப்பட்டு உள்ளனர். மழை வந்ததால் மட்டுமே உழவுப் பணிகளை தொடங்கும் மனநிலையில் விவசாயிகள் உள்ளனர். பருவமழைகள் சீராக பொழியாமல் ஏமாற்றுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.