காரைக்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 19–வது நாளாக மக்கள் போராட்டம்
காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடைக்கு எதிராக 19–வது நாளாக மக்கள் போராட்டம்
காரைக்குடி,
காரைக்குடி அருகே மித்ராவயலில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தி வரும் இவர்கள், மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி பாடுதல், பாடை கட்டி போராட்டம், உண்ணாவிரதம், தரையில் உருண்டு போராட்டம், நெற்றியில் நாமம் இட்டு எதிர்ப்பு, தூக்கு கயிற்றில் தொங்கும் போராட்டம் என பல்வேறு கோணங்களில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த மாதம் 19–ந்தேதி தொடங்கிய இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரிகளும் டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று 19–வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 3 வாரங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எந்த அதிகாரிகள் எங்களை வந்து சந்திக்கவில்லை. டாஸ்மாக் கடையை அடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் வருகிறார்களோ, இல்லையோ. டாஸ்மாக் கடையை அகற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என்றனர்.