காற்றாலையை அகற்றக்கோரி குளத்தில் குடியேறி கிராம மக்கள் போராட்டம் உதவி கலெக்டர், தாசில்தார் வாகனம் சிறைபிடிப்பு
காற்றாலையை அகற்றக்கோரி ஆலங்குளம் அருகே குளத்தில் குடியேறி கிராம மக்கள் நேற்று 2–வது நாளாக போராட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்,
காற்றாலையை அகற்றக்கோரி ஆலங்குளம் அருகே குளத்தில் குடியேறி கிராம மக்கள் நேற்று 2–வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது பேச்சுவார்த்தைக்கு சென்ற உதவி கலெக்டர், தாசில்தார் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
குளத்தில் குடியேறி போராட்டம்நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு சொந்தமான காற்றாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறியும் கிராம மக்கள் நேற்று முன்தினம் முதல் அந்த குளத்தில் பந்தல் அமைத்து குடியேறி போராட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில், நேற்று 300–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் மதியம் அனைவரும் வீட்டுக்கு செல்லாமல் குளத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்.
பேச்சுவார்த்தைதொடர்ந்து 2–வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். பொதுமக்கள் சார்பாக கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராஜாங்கம் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த ஊர் பிரதிநிதி வசந்த் மற்றும் பலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாகனங்கள் சிறைபிடிப்புபேச்சுவார்த்தையின் போது, இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் கூறினார். இதில் முழு திருப்தி அடையாத பொதுமக்கள் அந்த காற்றாலையை அகற்றக்கோரி உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் வந்த வாகனங்களின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உதவி கலெக்டர் ராஜேந்திரன், அந்த குளம் முதல் அருகில் உள்ள மானூர் கால்வாய் வரை முழுமையாக பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து நிச்சயமாக மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக்கூறி தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார்.
பரபரப்புஇதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலந்தாலோசித்து தற்காலிகமாக இந்த போராட்டத்தை கைவிட்டு மாலையில் கலைந்து சென்றனர். மேலும் (அதாவது நேற்று) இரவுக்குள் இதற்கு தீர்வு கிடைக்கவில்லையெனில் இரவு முழுக்க தங்கியிருந்து மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்று கூறினர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.