ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து தொழிலாளி சாவு


ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 Jun 2017 3:15 AM IST (Updated: 7 Jun 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை: மரம் விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாப சாவு

ஈரோடு,

ஈரோட்டில் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதில் மரம் விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பலத்த காற்றுடன் மழை

ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த ஒரு வாரமாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஒரு பெண் உள்பட மொத்தம் 14 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அங்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் நனையாமல் இருப்பதற்காக பூங்கா பகுதியில் உள்ள ஒரு வேப்பமரத்தின் கீழ் நின்று கொண்டு இருந்தனர்.

கொல்கத்தா தொழிலாளி சாவு

அப்போது திடீரென அந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் மரத்தின் கீழ் நின்று கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள். ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த ஜியாத் (வயது 30) என்பவர் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஜியாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மரத்தை அறுத்து எடுத்து ஜியாத்தின் உடலை மீட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாய் செத்தது

மேலும் நேற்று வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நாச்சியப்பா வீதியில் 2 மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதேபோல் சம்பத் நகர் பகுதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்தது. அப்போது காருக்கு அடியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த நாய் ஒன்று செத்தது. ஈரோடு –மேட்டூர் ரோட்டில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகை ஒன்று கிழிந்து காற்றில் பறந்து அருகில் சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் போய் விழுந்தது. ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி 70 அடி ரோட்டிலும் ஒரு வேப்பமரம் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று சாய்ந்து விழுந்தது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பட்லூர், பருவாச்சியில் நேற்று மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 4.45 மணி வரை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.

அந்தியூர் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. நேற்று பெய்த மழையால் செங்கல் சூளைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.


Next Story