குறைதீர்வு நாள் கூட்டம் இடமாற்றம் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


குறைதீர்வு நாள் கூட்டம் இடமாற்றம் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு நாள் கூட்டம் வேளாண்மை துறை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வந்தவாசியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் செங்கத்திலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குறைதீர்வுநாள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம் குறித்து விவசாயிகள், அனைத்து துறை அலுவலர் களுக்கு தகவல் தரப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை விவசாயிகள் வந்தவாசி தாலுகா அலுவலகம் சென்றனர். அப்போது குறைதீர்வு கூட்டத்தை வேளாண்மை துறை அலுவலகத்தில் தான் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளதாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, தாசில்தார் எஸ்.முருகன் ஆகியோர் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடப்பதாக தான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது திடீரென கூட்டத்தை வேளாண்மை துறை அலுவலகத்திற்கு மாற்றினால் எப்படி, அங்கு அனைத்து துறை அதிகாரிகளும் வருவார்களா?, கூட்டத்தை இங்குதான் நடத்த வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பெ.அரிதாசு, மருதாடு மணி, கி.பால்ராஜ், ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் இந்த கூட்டம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தான் நடக்கும் என கூறிவிட்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம்

இதேபோல் செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று வேளாண்மை துறை சார்பில் செங்கம் ஊராட்சி ஒன்றிய சேவை கட்டிடத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றதுவது வழக்கம். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுப்பிரமணி தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார் வரவேற்றார். இடர்பாடு தாசில்தார் ரேணுகா, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் முருகன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், உதவி வேளாண் இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில், இக்கூட்டம் வழக்கமாக நடைபெறும் இடத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், மறுபடியும் தாலுகா அலுவலகத்திலேயே வருவாய்த்துறை மூலம் கூட்டம் நடத்த கோரியும், வறட்சி நிவாரணம் பெறாதவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story