சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவுபடி மூடப்பட்டது. இதன் காரணமாக, குடிபிரியர்கள் உசூப்பூர் ஊராட்சி ராகம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று வருகிறார்கள். எனவே கடையில் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. அதே நேரத்தில் இங்கு மதுகுடித்துவிட்டு செல்பவர்கள் அந்த பகுதியில் வீண் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால், அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருப்பதாகவும், மேலும் அந்த பகுதியில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
முற்றுகை போராட்டம்இந்த நிலையில், நேற்று பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு முத்து, சுனில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தைஇதுபற்றி தகவல் அறிந்த, சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் விஜயா தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வருகிற 13–ந்தேதி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி, அதன் மூலம் உரிய தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.