கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. வெப்பம் அணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம்கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்த போதிலும் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–
பெலாந்துறை(24 மி.மீ.), காட்டுமன்னார்கோவில்(16 மி.மீ), வேப்பூர்(12மி.மீ), லால்பேட்டை(10மி.மீ.), ஸ்ரீமுஷ்ணம்(8 மி.மீ.), விருத்தாசலம்(8 மி.மீ.), அண்ணாமலை நகர்(2.6 மி.மீ.), சிதம்பரம்(2 மி.மீ.), குப்பநத்தம்(2 மி.மீ.).
இடி, மின்னலுடன் மழைகடலூரில் நேற்று முன்தினம் மாலையில் காற்று வீசியபோதிலும் மழை பெய்யவில்லை. ஆனால் நேற்று மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது காற்றும் வீசியதால் பல இடங்களில் மின்வினியோகம் தடை பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் நேற்று இரவில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
இதேபோல் பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
திட்டக்குடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கீழ்ச்செருவாயில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனை பொதுப்பணித்துறையினர் வெட்டி அகற்றினர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.