டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 6:13 PM GMT)

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு பகுதிக்கும் இருளப்பபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை புதிதாக ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மதுக்கடையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த மதுக்கடை திறக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை அந்த மதுக்கடை திறப்பதற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் மதுக்கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடை முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

பா.ஜனதா ஆதரவு

இதுபற்றிய தகவல் அறிந்த பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமையில் பா.ஜனதா கட்சியினரும் அங்கு சென்று பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது எம்.ஆர்.காந்தி கூறும்போது, “இந்தப்பகுதியில் பள்ளிகள் அதிகமாக உள்ளன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இப்பகுதியில் வசிக்கிறார்கள். பெண்கள், மாணவிகள் சென்றுவரக்கூடிய பகுதியாக இப்பகுதி உள்ளது. எனவே டாஸ்மாக் மதுக்கடையை இங்கிருந்து உடனே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்“ என்றார்.

போராட்டம் குறித்த தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று அந்த டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படவில்லை. கடையை திறக்க ஊழியர்களும் வரவில்லை.


Related Tags :
Next Story