பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது வில்லுக்கச்சேரி மூலம் மது குறித்து விழிப்புணர்வு பாடலும் பாடப்பட்டது.
நூதன போராட்டம்நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி–ஆவுடையானூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. பாவூர்சத்திரம், ஆவுடையானூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டதால் மது பிரியர்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் கடந்த 1–ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பாரி வைத்து போராட்டம், ஆணுக்கும்–ஆணுக்கும் திருமணம் நடத்தி போராட்டம், பெண்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியும், குடிக்க பணம் கேட்கும் ஆண்களை துடைப்பத்தால் அடிப்பது போன்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
டாஸ்மாக் கடைக்கு பூட்டுநேற்று 7–வது நாளாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டனர். மேலும் வில்லுக்கச்சேரி மூலம் மது குறித்த விழிப்புணர்வு பாடல்கள் பாடப்பட்டன. அப்போது பெண்கள் பலர் பீடி சுற்றியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பொதுக்கள் தெரிவித்தனர்.