அ.தி.மு.க. அணிகள் பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளன மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி


அ.தி.மு.க. அணிகள் பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளன மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-08T02:06:45+05:30)

கோவையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு கூட்டம் தொடங்கியது அ.தி.மு.க. அணிகள் பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளன மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி

கோவை,

கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் இரா.முத்தரசன், ‘அ.தி.மு.க. அணிகள் பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளன’ என்றார்.

மாநில குழு கூட்டம் தொடங்கியது

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் நேற்றுக்காலை தொடங்கியது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி, கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் கே. நாராயணா, மாநில செயலாளர் இரா. முத்தரசன், மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன். மாநில செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவையில் நடக்கும் மாநிலக்குழு கூட்டத்தில் தமிழக மற்றும் தேசிய அளவிலான அரசியல் சூழல் குறித்தும் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இரா.முத்தரசன் பேட்டி

மாநில குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்தியில் உள்ள பா.ஜ.க ஆட்சி நடந்து முடிந்து 3 ஆண்டுகளில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பதவி சண்டையின் காரணமாக மக்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களால் மாநிலத்தின் உரிமைகள் பறிபோகின்றன.

தமிழகத்தில் ஆட்சி கவிழ்வதும், கவிழாமல் இருப்பதும் அ.தி.மு.க.வின் கையில் இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் கையில் தான் இருக்கிறது. அ.தி.மு.க. பல அணிகளாக இருந்தாலும் அனைத்து அணிகளும் பாரதீய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் சொன்னதை போல் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறி வைத்து தாக்கப்படுகிறது

மாநிலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில முன்னாள் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக சூழ்நிலைகள் சரியில்லை. மழை வெள்ளத்தால் ஒருமுறை பேரழிவை சந்தித்தது. வார்தா புயல் தமிழகத்தையே புரட்டியது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெயில் தாக்கியது. குடிநீருக்கே மக்கள் அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. விவசாயம் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறவில்லை. இது ஒருபுறமிருக்க கடந்த 2014–ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகள் முன்னரே மக்களால் நிராகரிக்கப்பட்டவை ஆகும்.

தமிழகம் சமூக நீதிக்காக போராடிய மாநிலம். இட ஒதுக்கீட்டை கடந்த 1920–ம் ஆண்டிலேயே சட்டமாக இயற்றிய மாநிலம் தமிழகம் தான். மாட்டிற்கு புல் கூட போடாத கூட்டம் இன்று மாட்டிறைச்சிக்கு தடை என்று கொண்டு வந்து இருக்கிறது. உண்மையில் நம்முடைய விவசாயிகள்தான் மாட்டை அதிகம் நேசிப்பவர்கள். பொங்கல் வைத்தால் முதலில் மாட்டுக்கு ஊட்டி விட்டுதான் சாப்பிடுவார்கள். இப்போது மாட்டிறைச்சிக்கு தடை என்று வந்த பிறகு மாட்டுக்கறி ரூ.200–ல் இருந்து ரூ.300–க்கு உயர்ந்து விட்டது. ஆட்டுக்கறி ரூ470–ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. இப்படி மக்கள் மீது அடுத்தடுத்து விலைவாசி, வரிகள் என சுமைகள் சுமத்தப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

மத்திய அரசே காரணம்

தமிழகத்தில் அரசு இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் மாநில அரசின் உரிமைகளை விட்டு கொடுத்திருக்க மாட்டார். ஆனால் இப்போது மாநில உரிமைகளில் கைவைத்தால் கூட எதுவும் பேசாமல் இருக்கிறார்கள். தலைமை செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை நடத்தப்படுகிறது. ஏன் செய்தாய் என்று கூட கேட்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியலின் குழப்பத்துக்கு மத்திய அரசே காரணம்.

கருணாநிதி 60 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் மிகப் பெரிய பங்காற்றியவர். தொடர்ந்து 30 ஆண்டு காலம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அவர் ஒருமுறை கூட தோற்றதில்லை. அண்ணா, காமராஜர், இந்திரா உள்ளிட்ட தலைவர்களும் எங்களது கட்சியின் தலைவர்களும் தோற்று இருக்கிறார்கள். ஆனால் அவர் தோற்றதில்லை. தமிழகத்தில் அவருக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நாங்கள் மூத்த தலைவர்களை மதிக்கிறோம். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை மதிக்கிறோம். கருணாநிதிக்கு நடந்த விழாவை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்தது சரியில்லை. அவருக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் விட்டு விடலாம். விமர்சிக்கக் கூடாது. மூத்த தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். தனியார் பாலில் கலப்படம் குறித்து அமைச்சர் விளக்க வேண்டும். பரிசோதனை முடிவின் உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் இன்றும்(வியாழக்கிழமை) நடக்கிறது.


Next Story